Home இலங்கை ரிஷாத், ரியாஜ்ஜை 90 நாட்கள் வரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

ரிஷாத், ரியாஜ்ஜை 90 நாட்கள் வரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

by admin

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் (சி.ஐ.டி.) கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை முதல் 90 நாட்களுக்கு அவ்விருவரையும் தடுத்து வைத்து விசாரிக்கவே, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 9 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் இந்த அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனும் கைது செய்யப்பட்டு 48 மணி நேரம் கடந்த பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஹான் பிரேமரத்னவின் கோரிக்கைக்கு அமைய பொலிஸ் திணைக்களத்தால், பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் 90 நாட்கள் தடுத்து வைப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

பயங்கரவாத தடை சட்டத்தின் 6 (1) ஆம் பிரிவின் கீழ், பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் அனுமதியின் கீழ் சந்தேக நபர் ஒருவரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க முடியும் என்ற நிலையில், அந்த 72 மணி நேரம் நேற்று அதிகாலையுடன் நிறைவுக்கு வந்தது.

இந்நிலையிலேயே, அது முதல் மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அனுமதியளித்துள்ளார்.

அதன்படி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் சி.ஐ.டி., ரி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஹான் பிரேமரத்னவின் ஆலோசனைக்கு அமைய, விஷேட விசாரணைப் பிரிவின் இலக்கம் 3 விசாரணை அறை பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயசேகரவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவி, ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ரிஷாடத் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கடந்த சனியன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களில் ரிஷாத் பதியுதீன் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவொன்றும் பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்தின் ஒரு குழுவும் இரு விடயங்களை மையப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக நேற்று மாலையாகும் போது, சினமன் கிராண்ட் ஹோட்டல் குண்டுதாரின இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலைக்கு, செப்பு விநியோகம் செய்த நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அறியமுடிகிறது.

இதேவேளை, ரிஷாத்தின் சகோதரர் ரியாஜ்ஜிடம், அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தை மையப்படுத்தியதாகவே விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது.

 

related posts