கொவிட் நிலைமையால் இவ்வாறு நாடு பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் , அரசாங்கத்தை விமர்சிக்கின்றவர்களை கைது செய்வதிலேயே அதிக அவதானம் செலுத்தப்படுகிறது. எதிர் கட்சியினரை பழிவாங்குவதால் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து அவற்றுடன் கலந்துரையாடி மக்களுக்கான சிறந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் , அரச வைத்தியசாலைகளில் சகல தீவிர சிகிச்சை பிரிவுகளும் நிரம்பியுள்ளன. அத்தோடு தற்போது வைரஸ் அறிகுறிகள் எவையும் ஏற்படாமல் நேரடியாக நிமோனியா நிலைமை ஏற்படுகிறது. இது பாரிய அச்சுறுத்தலாகும். தற்போதுள்ள வைரஸ் ஏற்கனவே இனங்காணப்பட்டதா அல்லது வெளிநாடுகளிலிருந்து பரவியதா என்பது இன்னும் இனங்காணப்படவில்லை.
அத்தோடு இதுவரையில் மேலதிகமாக செயற்கை சுவாச கருவிகளும் அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்படவில்லை. அத்தோடு பல மாவட்டங்களிலும் இதுவரையில் கொவிட் தடுப்பிற்கான மத்திய நிலையமும் அமைக்கப்படவில்லை. சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை வசதிகள் காணப்படுகின்ற வைத்தியசாலைகள் பல உபயோகிக்கப்படாமல் உள்ளன.
கொவிட் கட்டுப்படுத்தலுக்கு தடுப்பூசியே தீர்வு என்று ஜனாதிபதி கூறியுள்ள போதிலும் , அவற்றை பெற்றுக் கொள்வதற்கு முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது 130 இலட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் சகலருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
கொவிட் நிலைமையால் இவ்வாறு பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும், அரசாங்கத்தை விமர்சிக்கின்றவர்களை கைது செய்வதிலேயே அதிக அவதானம் செலுத்தப்படுகிறது. எதிர்கட்சியினரை பழிவாங்குவதால் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து அவற்றுடன் கலந்துரையாடி மக்களுக்கான சிறந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.