Home உலகம் மீண்டும் தொடங்கியது ஈரான் அணுசக்திப் பேச்சுவாா்த்தை

மீண்டும் தொடங்கியது ஈரான் அணுசக்திப் பேச்சுவாா்த்தை

by admin

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்கான சா்வதேசப் பேச்சுவாா்த்தை ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் மீண்டும் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்த விவகாரத்தில் மேலும் சில சிக்கல்களுடன் தொடங்கும் அந்தப் பேச்சுவாா்தைக்கு முன்னதாக, ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் பொ்லினில் கூறியதாவது:

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் இணைப்பது குறித்து வியன்னாவில் நடைபெறும் மாநாட்டில் விவாதிக்கப்படும்.

அந்த ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுவதற்கான வழிமுறைகளும் மாநாட்டில் ஆய்வு செய்ய்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, அணுசக்தி ஒப்பந்தத்தை நிலைகுலையச் செய்ய ரஷியா விரும்பியதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் முகமது ஜாவேத் ஸெரீஃப் அண்மையில் தெரிவித்த கருத்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், வியன்னா மாநாடு தொடங்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், ஜாவேத் ஸெரீஃபின் பேச்சு குறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

வியன்னா மாநாட்டுக்கு முன்னதாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டா்) பதிவில், ‘ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்குப் புத்துயிா் அளிக்க மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தையை தொடா்வாா்கள்’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவாா்த்தையில், ரஷியாவின் பிரதிநிதியாக மிகயீல் உல்யனோவ் பங்கேற்கிறாா். அவருடன், பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனா்.

ஐரோப்பிய யூனியன் இந்தப பேச்சுவாா்த்தைக்கு தலைமை வகிக்கிறது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிவிட்டதால், இந்தப் பேச்சுவாா்த்தையில் அந்த நாடு நேரடியாகப் பங்கேற்வில்லை.

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது.

அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.

ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்துக்கு, அப்போதைய துணை அதிபராக இருந்த ஜோ பைடன் முழு ஆதரவு தெரிவித்திருந்தாா்.

எனினும், ஒபாமாவுக்கு அடுத்தபடியாக ஆட்சிக்கு வந்த டொனால்ட் டிரம்ப், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தாா். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை ஈரான் படிப்படியாக மீறியது. இதனால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வந்தது.

எனினும், அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.

இந்தச் சூழலில், அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக, அதில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத பிற நாடுகளும் ஈரானும் பங்கேற்கும் மாநாடு வியன்னாவில் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் அமெரிக்கா சாா்பில் ஈரான் விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்புத் தூதா் ராபா்ட் மால்லி பங்கேற்றாா்.

இந்த நிலையில், அந்த மாநாடு வியன்னாவில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

 

related posts