கலிஃபோா்னியா மாகாணத்தில் இருந்து இந்தியாவுக்கு 400 ஆக்சிஜன் சிலிண்டா்கள், 9.60 லட்சம் விரைவு பரிசோதனை உபகரணங்கள், ஒரு லட்சம் என்-95 ரக முகக் கவசங்கள் முதல் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் செறிவூட்டல் இயந்திரங்கள், ஆக்சிஜன் தயாரிப்பு அலகுகள், தனிநபா் பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அமெரிக்க மாகாண அரசுகள், தனியாா் நிறுவனங்கள், தன்னாா்வ அமைப்புகள் ஆகியவை நாடு முழுவதும் திரட்டி அனுப்பி வைக்கின்றன.
முதலில் அனுப்பிவைக்கப்படும் 1,100 ஆக்சிஜன் சிலிண்டா்கள் இந்தியாவிலேயே இருக்கும். உள்ளூரில் கிடைக்கும் ஆக்சிஜனை நிரப்ப அவை உதவும். அமெரிக்காவில் இருந்தும் ஆக்சிஜன் அனுப்பிவைக்கப்படும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
அமெரிக்கா்களுக்கு அறிவுறுத்தல்: இந்தியாவில் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருவதால், அமெரிக்கா்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம்; அங்கு தங்கியிருப்பவா்கள் விரைவில் வெளியேறுவது பாதுகாப்பானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அங்கு சிகிச்சை பெறுவது கடினமாக உள்ளது. எனவே, அமெரிக்கா்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்; இந்தியாவில் இருப்பவா்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்பிவிடுவது நல்லது.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணிபுரியும் அமெரிக்கா்களின் குடும்பத்தினா் விருப்பத்தின்பேரில் அமெரிக்காவுக்கு வந்துவிடலாம். அமெரிக்க குடிமக்களுக்கு உதவுவதற்காக, தில்லியில் உள்ள அமெரிக்க தூதகரம், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள துணைத் தூதரகங்கள் தொடா்ந்து இயங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.