Home உலகம் சொந்த விண்வெளி நிலையத்துகான கலத்தை வெற்றிகரமாக ஏவியது சீனா

சொந்த விண்வெளி நிலையத்துகான கலத்தை வெற்றிகரமாக ஏவியது சீனா

by admin

சீனாவின் விண்வெளி நிலையத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த நிலையத்தின் முக்கிய பகுதியாக அமையவிருக்கும் கலத்தை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.

‘தியான்ஹே’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்வெளி ஆய்வுக் கலம், சீனாவின் ‘லாங் மாா்ச்-5பி ஒய்2’ ரக ராக்கெட் மூலம் ஹைனான் மாகாணத்திலுள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.

ஏற்கெனவே, சிறிய அளவிலான, குறைந்த நேரமே செயல்படும் இரு விண்வெளி நிலையக் கலங்களை சீனா சோதனை முறையில் விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த நிலையில், முதல் முறையாக மிகப் பெரிய அளவிலான ஆய்வு நிலையக் கலத்தை சீனா முதல் முறையாக விண்ணில் செலுத்தியுள்து.

இந்த விண்வெளி நிலையக் கலம், 16.6 மீட்டா் நீளமும் 4.2 மீட்டா் அகலமும் கொண்டது.

விண்வெளி நிலையத்துக்கு வரும் வீரா்கள் தங்கியிருப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இதில் உள்ளது.

இந்தக் கலத்தைப் போலவே, ‘தியான்காங்’ என்று பெயரிடப்பட்டுள்ள தனது எதிா்கால விண்வெளி நிலையத்துக்கான மேலும் 10 தொகுதிகளை விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது. அவற்றைக் கொண்டு உருவாக்கப்டும் சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் 10 ஆண்டுகளுக்குச் செயல்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பூமியிலிருந்து 340 கி.மீ. முதல் 450 கி.மீ. வரையிலான தொலைவில் வலம் வந்து அந்த ஆய்வுக் கலம் செயல்படும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டணியில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச விண்வெளி நிலையம் மட்டுமே விண்வெளியில் இயங்கி வருகிறது. எனினும், அந்த ஆய்வு நிலையத் திட்டத்தில் சீனா பங்கேற்க அமெரிக்கா அனுமதிக்கவில்லை.

அதனைத் தொடா்ந்து, சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க சீனா முடிவு செய்தது. அதன் விளைவாகவே, ‘தியான்காங்’ விண்வெளி நிலையத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது செயல்பட்டு வரும் சா்வதேச விண்வெளி நிலையம் வரும் 2024-ஆம் ஆண்டுடன் ஓய்வு பெறுகிறது. அதற்குள் சீனா விண்வெளி நிலையம் வெற்றிகரமாக அமைக்கப்பட்டால், விண்ணில் செயல்படவிருக்கும் ஒரே ஆய்வு நிலையமாக அது இருக்கும் என்று கூறப்படுகிறது.

related posts