Home இந்தியா திங்களன்று பதவியேற்பு விழா நடத்த ஏற்பாடுகள்: முதல்வரின் ஆச்சரிய உத்தரவு

திங்களன்று பதவியேற்பு விழா நடத்த ஏற்பாடுகள்: முதல்வரின் ஆச்சரிய உத்தரவு

by admin

கேரளத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், ஆளும் இடதுசாரிக் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், உடனடியாக அதாவது மறுநாள் திங்கள்கிழமையே பதவியேற்பு விழாவை நடத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தொற்று மிக வேகமெடுத்திருக்கும் நிலையில், கேரளத்தில் உடனடியாக அரசுப் பொறுப்பேற்றுக் கொண்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மறுநாளே பதவியேற்பு விழாவை நடத்த முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்கும் முதல்வர் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்றும், அன்றைய தினம் முதல்வர் மட்டுமோ அல்லது அவருடன் 3 அல்லது 4 மூத்த அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்ளும் வகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய வாய்மொழி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில நிர்வாகத்துறைக்கு முதல்வர் பிறப்பித்த இந்த உத்தரவு தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் எக்ஸ்பிரஸ் குழுவுக்குக் கிடைத்துள்ளது.

கேரளத்தில் மீண்டும் இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர்கள் அதீதமாக நம்புவதும் இந்த உத்தரவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதையே, 2 நாள்களுக்கு முன்பு வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் தெரிவித்தன.

பொதுவாக தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஒரு சில நாள்களில் பதவியேற்பு விழா நடைபெறும். 2016-ஆம் ஆண்டில் கூட மே 19 தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 6 நாளக்ளுக்குப் பின் முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு அதில் முதல்வர் தேர்வு செய்யப்பட வேண்டும். பிறகு ஆளுநரை சந்தித்து பதவியேற்க அழைப்பு விடுக்குமாறு கோர வேண்டும். ஆளுநர் அழைப்பு விடுத்ததும் பதவியேற்பு விழா நடைபெறும்.

ஆனால், பதவியேற்பு அடுத்த நாளே நடைபெற வேண்டும் என்றால், இதையெல்லாம் பினராயி விஜயன் திங்கள்கிழமையே செய்ய வேண்டும், இது மிகவும் கஷ்டமான காரியம் என்றாலும் செய்ய முடியாத காரியமல்ல என்கிறது முக்கிய வட்டாரங்கள்.

related posts