தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பெரும்பான்மை இடங்களில் திமுக முன்னிலையில் இருப்பதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் ஏராளமான திமுக தொண்டர்கள் வெற்றிக் களிப்பில் குவிந்துள்ளனர்.
கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றிக் கொண்டாட்டங்கள் கூடாது என்று தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை மறந்து, ஏராளமான திமுக தொண்டர்கள் சென்னையிலுள்ள திமுக கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
12 மணி நிலவரப்படி தமிழகத்தில் ஆளும் அதிமுக கூட்டணி 91 இடங்களிலும், திமுக கூட்டணி 142 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதால், திமுக தொண்டர்கள் தற்போதே வெற்றிக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர்.
முன்னதாக, வெற்றிக் கொண்டாட்டங்கள் கூடாது என்று தேர்தல் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தன.
இந்த உத்தரவுகளை ஏற்று, வெற்றிக் கொண்டாட்டங்களை வீடுகளுக்குள்ளேயே நடத்துமாறும், வீதிகள் வெறிச்சோடட்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலினும் கட்சித் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.