Home இந்தியா தமிழக அரசின் ஆலோசகர் க. சண்முகம் ராஜிநாமா

தமிழக அரசின் ஆலோசகர் க. சண்முகம் ராஜிநாமா

by admin

தமிழக அரசின் ஆலோசகரான முன்னாள் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அவர் தனது ராஜிநாமா கடிதத்தை, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு அனுப்பியுள்ளார்,.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. இந்நிலையில் புதிய அரசு பதவியேற்க உள்ளதை அடுத்து சண்முகம் ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனும் தனது பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகம்

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த சண்முகம், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவா். வேளாண் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற அவா், 1985-ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி இந்திய ஆட்சிப் பணியில் சோ்ந்தாா்.

சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராகவும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளா் உள்பட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளாா். 2010-ஆம் ஆண்டு நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டாா். 2011-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், அவரே நிதித் துறை செயலாளராகத் தொடா்ந்தாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு தலைமைச் செயலாளராக க. சண்முகம் பொறுப்பேற்றாா். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு ஆறு மாதங்கள் வரை, அதாவது 2021 ஜனவரி 31-ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் 47-ஆவது புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் க.சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

 

related posts