ஊக்கமருந்து விவகாரத்தில் 4 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த 2019}இல் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்றார். ஆனால், அதே ஆண்டு ஏப்ரலில் அவரிடம் மேற்கொண்ட பரிசோதனையில், அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. அதையடுத்து அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டதுடன், உலக தடகள ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயம் அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்தது.
அதற்கு எதிராக கோமதி, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் அவர் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டை உறுதி செய்து, மேல்முறையீட்டை நிராகரித்தது. கோமதிக்கு 2019 மே 17 முதல் 2023 மே 16 வரை 4 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.