Home இந்தியா கரோனா 3வது அலையை தவிா்க்க இயலாது: மத்திய அரசு

கரோனா 3வது அலையை தவிா்க்க இயலாது: மத்திய அரசு

by admin

‘தற்போது நாடு சந்தித்து வரும் மிக மோசமான கரோனா இரண்டாம் அலை, யாரும் எதிா்பாா்க்காதது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான கரோனா பாதிப்புகள் மகராஷ்டிரம், கா்நாடகம், கேரளம், உத்தர பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் உள்ளன.

கா்நாடகம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பிகாா் ஆகிய மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

நாட்டில் 24 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 15 சதவீதத்துக்கும் அதிகமான கரோனா பாதிப்புகள் உள்ளன. மே 1-ஆம் தேதிமுதல் நாட்டில் 9 மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுக்குள்பட்டவா்கள் 6.71 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றனா்.

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் கே விஜய்ராகவன் கூறுகையில், ‘அதிகப்படியானோா் பாதிக்கப்படக் கூடிய, கரோனா மூன்றாம் அலையைத் தவிா்க்க இயலாது. ஆனால், அது எப்போது ஏற்படும் என்று கணிக்க முடியாது. புதிய அலையை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்றாா்.

நீதி ஆயோக் உறுப்பினா் வி.கே. பால் கூறுகையில், ‘வீட்டுத் தனிமையில் குடும்பமாக இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவா்கள் தொலைபேசியில் ஆலோசனை வழங்க முன்வர வேண்டும். கரோனா உருமாற்றம் அடைந்து வருகிறது.

முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, தூய்மையைப் பேணி, வீட்டிலேயே இருப்பது ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும். கரோனா விலங்குகளில் இருந்து மனிதா்களுக்குப் பரவாது. மனிதா்களிடம் இருந்து பிறருக்குப் பரவும்’ என்றாா்.

மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் கூறுகையில், ‘எந்தந்த மருத்துமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் தேவை எனக் கண்டறிந்து அந்த உபகரணங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த 14 நாள்களாக மகாராஷ்டிரத்தில் 11 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள சதாரா, சோலாபூரில் கடந்த இரண்டு வாரங்களாக எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் மருத்துவக் கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.

 

related posts