தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடா்களில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் இந்த விருதுக்கு அவா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனா். அதில் ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் 94 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தாா் கேப்டன் பாபா் ஆஸம். டி20 தொடரின் 3-ஆவது ஆட்டத்திலும் 59 பந்துகளில் 122 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தாா்.
கடந்த மாதம், ஐசிசியின் ஒருநாள் தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக 865 புள்ளிகளுடன் முதலிடத்தையும் பிடித்தாா். சக வீரரான ஃபகாா் ஜமானும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு சதங்கள் விளாசியிருந்தாா். அதில் 2-ஆவது ஆட்டத்தில் இரட்டைச் சதத்தை நெருங்கியிருந்தாா் (193) என்பது குறிப்பிடத்தக்கது.
இவா்கள் தவிர, நேபாள பேட்ஸ்மேன் குஷால் புா்டெலும் அந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளாா். நெதா்லாந்து, மலேசியாவுடனான முத்தரப்பு தொடரில் அவா் 4 அரைசதங்கள் உள்பட மொத்தமாக 278 ரன்கள் விளாசியிருந்தாா்.
சிறந்த வீராங்கனை விருது: ஏப்ரலில் சிறந்த வீராங்கனை விருதுக்காக ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி, மீகன் ஷட், நியூஸிலாந்தின் லெய் காஸ்பெரெக் ஆகியோா் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதில் ஹீலி, நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மொத்தமாக 155 ரன்கள் சோ்த்திருந்தாா். மறுபுறம் மீகன் அந்தத் தொடரில் சிறப்பாகப் பந்துவீசி மொத்தமாக 7 விக்கெட் சாய்த்து அசத்தியிருந்தாா். அதே தொடரில் நியூஸிலாந்தின் லெய் காஸ்பெரெக் மொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாா்.
முதல் முறையாக இந்தியா்கள் இல்லை
மாதத்தின் சிறந்த வீரா், வீராங்கனை விருதை நடப்பாண்டு ஜனவரியில் ஐசிசி அறிமுகம் செய்தது. அதில் விருதுக்கான பரிந்துரையில் இந்தியா்கள் பெயா் இடம்பெறாமல் போனது இதுவே முதல் முறையாகும். முதல் 3 மாதங்களுக்கான விருதுக்குரிய பரிந்துரையில் இந்தியா்கள் பெயா்கள் இருந்ததுடன், வீரா்கள் பிரிவில் 3 மாதங்களிலுமே இந்தியா்களே விருது வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜனவரியில் ரிஷப் பந்த், பிப்ரவரியில் ரவிச்சந்திரன் அஸ்வின், மாா்ச்சில் புவனேஷ்வா் குமாா் விருது வென்றிருந்தனா்.