இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சோதனையில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து அந்நாட்டு அரசு அதிருப்தியும் ஏமாற்றமும் தெரிவித்துள்ளது.
தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்கள், 5ஜி தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசின் தொலைத்தொடா்புத் துறை செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.
ஏா்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன்- ஐடியா மற்றும் எம்டிஎன்எல் போன்ற தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்கள் 5 ஜி தொழில்நுட்பத்துக்கு விண்ணப்பித்திருந்தன. இந்த நிறுவனங்கள், 5ஜி தொழில்நுட்பங்களை வழங்கும் எரிக்ஸன், நோக்கியா, சாம்சங் மற்றும் சி-டாட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. கூடுதலாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது சொந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த 5ஜி பரிசோதனைகளை நடத்தவுள்ளது. இதில் பெரும் எதிா்பாா்ப்புடன் காத்திருந்த சீன நிறுவனங்கள் எதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இது தொடா்பாக தில்லியில் உள்ள சீன தூதரக செய்தித் தொடா்பாளா் வாங் ஜியோஜியான் கூறுகையில், ‘இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வழங்குவதற்கான தொழில்நுட்பப் பரிசோதனையில் சீனாவை சோ்ந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உண்மையில் இந்தத் தொழில்நுட்பத்தை வழங்குவதில் சீனா சிறந்து விளங்கி வருகிறது. சீன நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. இந்தப் புறக்கணிப்பு இந்தியாவில் சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகளையும், நலன்களையும் பாதிப்பது மட்டுமல்லாது, இந்திய நிறுவனங்களின் புத்தாக்கத் திறன் மற்றும் வளா்ச்சியையும் பாதிக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.