Home இந்தியா மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் முரளீதரன் கார் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் முரளீதரன் கார் மீது தாக்குதல்

by admin

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்ட பாஜக தொண்டர்களை நலம் விசாரிக்க சென்ற மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி. முரளீதரனின் கார் வியாழக்கிழமை தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்களே காரணம் என்று அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் முரளீதரன் தனது சுட்டுரையில், “மேற்கு மிதுனபுரி மாவட்டத்தில் தேர்தலுக்கு பிறகு தாக்கப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்ட பாஜக தொண்டர்களைச் சந்திக்க சென்றேன். ஒவ்வொரு வீட்டையும் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனத்துடன் சென்று பார்வையிட்டபோது, திடீரென ஒரு கும்பல் எங்கள் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் எனது வாகனத்தின் கார் கண்ணாடிகள் உடைந்தன. எனது வாகன ஓட்டுநர் காயமடைந்தார். நான் பாதுகாப்பாக உள்ளேன். வன்முறையால் எனது பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு திரும்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

“போலீஸார் முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது’ என்று அமைச்சருடன் இருந்த பாஜக தேசிய செயலர் ராகுல் சின்ஹா தெரிவித்தார்.
“இந்தச் சம்பவம் வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் நடைபெற்றது. அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அமைச்சரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்பட்டவில்லை’ என்று கோட்வாலி காவல் நிலைய அதிகாரி கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் முரளீதரன் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் இப்போது நடைபெறுவது எல்லாம் அரசியல் அல்ல; குண்டர்களின் அராஜகம். பெண்கள் மீதான வன்முறையை மேற்கு வங்கம் எப்போது தடுத்து நிறுத்தியதில்லை’ என்றார்.
நட்டா கண்டனம்: மத்திய இணையமைச்சர் வி. முரளீதரன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
“தேர்தல் முடிந்த பிறகு மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் ஆதரவில் முழுவீச்சில் வன்முறை நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

மத்திய அமைச்சர் மீதே தாக்குதல் நடத்தும்போது சாமானியர்களின் நிலை என்ன? பாஜக தொண்டர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்படுகிறது. பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வெளியேறி வருகின்றனர்’ என்று ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்

 

related posts