Home இந்தியா 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி வருவாய் பற்றாக்குறை நிதி

17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி வருவாய் பற்றாக்குறை நிதி

by admin

தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை வருவாய்ப் பற்றாக்குறை நிதியாக மத்திய அரசு விடுவித்துள்ளது.

15-ஆவது நிதிக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

மத்திய-மாநில அரசுகளுக்கிடையே வருவாயைப் பகிா்ந்து கொள்வது தொடா்பான பரிந்துரைகளை நிதிக் குழு மத்திய அரசுக்கு வழங்கும். வருவாயை விட செலவினம் அதிகமாகக் காணப்படும் மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை நிதியை வழங்குவதற்கு நிதிக் குழு பரிந்துரைக்கும்.

15-ஆவது நிதிக் குழு அண்மையில் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமா்ப்பித்திருந்தது. அதில் தமிழகம், ஆந்திரம், அஸ்ஸாம், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், கா்நாடகம், கேரளம், மணிப்பூா், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1,18,452 கோடியை வருவாய்ப் பற்றாக்குறை நிதியாக வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அந்த நிதியை மாதந்தோறும் தவணை முறையில் மத்திய அரசு விடுவித்து வருகிறது. அதன்படி இரண்டாவது தவணையாக ரூ.9,871 கோடியை மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை விடுவித்தது. இது தொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நிதியமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் செலவினத் துறை, 17 மாநிலங்களுக்கான வருவாய்ப் பற்றாக்குறை நிதியாக ரூ.9,871 கோடியை விடுவித்துள்ளது.

இதன் மூலம் 2 தவணைகளில் ஒட்டுமொத்தமாக ரூ.19,742 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் வருவாய்ப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு இந்த நிதி உதவும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

related posts