Home இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாத அரசு இனத்துவேசமாக செயற்படுகிறது – சாணக்கியன்

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாத அரசு இனத்துவேசமாக செயற்படுகிறது – சாணக்கியன்

by admin

கொவிட் 19 நிவாரண நிதியத்துக்கு கிடைத்துள்ள 1727 மில்லியன் ரூபாவில் இதுவரை 105 மில்லியன் ரூபாவை மாத்திரமே அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதுடன், அரசாங்கம் இனத்துவேசமாகவே நடந்துகொள்கிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றம் சாட்டினார்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கான இரண்டாவது தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்காக நாரரேஹன்பிட்டியவிலுள்ள இராணுவ வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தபோது ஊடகங்களுக்கு மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“உண்மையிலேயே நான் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கான எண்ணம் இருக்கவில்லை. பொது மக்களுக்கு இவை சேர வேண்டும் என்றே ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.

எனினும், அரசாங்கத்திலுள்ளவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தங்களது வீடுகளுக்கே வரவழைத்துக்கொண்டு தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவருக்கும் ஏற்றி பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவருக்கும் தடுப்பூசியை ஏற்ற முடியுமென்றால் நான் ஏற்றிக்கொள்வதில் தவறில்லை என்று நினைத்தே, இந்த தடுப்பூசியை ஏற்ற முன்வந்தேன்.

கிழக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டாலும், நாளாந்தம் 500 முதல் 600 வரையானவர்களது பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் மாத்திரமே வெளியிட முடிகின்றது.

மேலும், இன்று காலை வரை 2000 பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளிவராது காணப்படுகிறது. காரணம் கிழக்கு மாகாணத்தின் மட்டகளப்பு ஆதார வைத்தியசாலையில் மாத்திரமே பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை வெளியிடக்கூடிய ஆய்வுக் கூட வசதிகள் காணப்படுகிறது.

இதனால், பி.சி.ஆர். முடிவுகளை வெளியிடுவதற்கு 5 நாட்களுக்கு மேல் எடுக்கின்றன. ஆகவே, இந்த அரசாங்கம் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளதுடன், இனத்துவேசமாக நடந்துகொண்டிருக்கிறது.” என்றார்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் அங்கம்வகித்தும்கூட, இங்குள்ள மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் கூட இது தொடர்பாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்காது மெளனித்து கிடக்கின்றமை கவலையளிக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் மாத்திரமே பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய ஆய்வுகூட வசதிகள் காணப்படுகிறது.

இந்த ஆய்வுகூட வசதியானது,ஏனைய இரு மாவட்டங்களான திருகோணமலை மற்றும் அம்பாறையில் உள்ள வைத்தியசாலைகளில் இல்லை.

அம்பாறை வைத்தியசாலையில் 45 மில்லியன் ரூபா செலவில் கட்டிடம் அமைக்கப்பட்டது. அங்கு ஒக்சிஜன் வசதி கூட இல்லை. இதற்கு செலவழித்தை பணத்தைக்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய ஆய்வுகூட வசதிகளை நிர்மாணித்திருக்கலாம்” என்றார்.

“கொவிட் 19 நிவாரண நிதியத்துக்கு கிடைத்துள்ள 1727 மில்லியன் ரூபாவில் இதுவரை 105 மில்லியன் ரூபாவை மாத்திரமே அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது என ‘வெரிட்டெ’ எனும் ஆய்வு நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு 105 மில்லியன் ரூபாவை மாத்திரமே அரசாங்கம் செலவழித்திருந்தால், மிகுதிப் பணத்துக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

அந்த பணத்தைக்கொண்டு நாட்டு மக்களுக்கு அவசியமான தடுப்பூசிகளை கொள்வனவு செய்து வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும். மேலும், வைத்தியசாலைகளுக்கு தேவையான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய உபகரணங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதை விடுத்து தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக பாலங்களை அமைப்பது, பெருந்தெருக்களை நிர்மாணிப்பது மாத்திரம் மக்கள் நலனில் அடங்காது” என்றார்.

 

related posts