Home சினிமா இந்தியன் 2 தாமதம் : லைகா நிறுவனத்தை சரமாரியாக குற்றம் சாட்டிய ஷங்கர்

இந்தியன் 2 தாமதம் : லைகா நிறுவனத்தை சரமாரியாக குற்றம் சாட்டிய ஷங்கர்

by admin

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் இந்தியன் 2. காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கிரேன் விபத்து, கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் இப்படம் தடைப்பட்டது. ஆனால் அதன்பின்பும் படப்பிடிப்பு துவங்கவில்லை.

இந்தியன்-2 படத்தை முடிப்பதற்கு முன்பே ராம் சரண், ரன்வீர்சிங் போன்ற நடிகர்களை வைத்து தனது புதிய படங்களை இயக்க இருப்பதாக அறிவித்தார் ஷங்கர். ஆனால் இந்தியன்-2 படத்தை முடித்த பிறகே அவர் மற்ற படவேலைகளை தொடங்க வேண்டும் என்று லைகா நிறுவனம் நீதிமன்றம் வாயிலாக ஷங்கருக்கு தடை கோரி வழக்குத் தொடர்ந்தது. இந்த விவகாரத்தில் இருவரும் சுமூகமாக பேசி தீர்த்து கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் அவற்றில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பல உண்மைகளை மறைத்து லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருப்பதாக நீதிமன்றத்தில் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்தியன்-2 படத்தை முதலில் தயாரிக்க இருந்தவர் தில்ராஜூ. ஆனால் அவரிடமிருந்து அந்த படத்தை தாங்கள் தயாரிப்பதாக லைகா நிறுவனம் கேட்டு பெற்றது. அதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டில் முதல்கட்ட வேலைகளை துவங்கி 2018 மே மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட்டான ரூ.270 கோடியை குறைக்குமாறு லைகா நிறுவனம் சொன்னதும் அதை தான் 250 கோடியாக்கியபோதும் படப்பிடிப்பை தொடங்க தாமதம் செய்தது.

நடிகர் கமலுக்கு மேக்கப் அலர்ஜியினால் தாமதம் மற்றும் கிரேன் விபத்து, கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட தாமதங்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. 2020 முதல் 2021மே மாதம் வரை ஓராண்டு காலம் படப்பிடிப்பே நடத்தாமல் தாமதம் செய்தது லைகா நிறுவனம்தான். இதனால் எனக்கு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், இந்த படத்தில் நடித்த விவேக் இறந்து விட்டதால் அவரது காட்சிகளை மீண்டும் வேறு நடிகரை வைத்து படமாக்க வேண்டியுள்ளது. இந்தியன்-2 படப்பிடிப்பு தாமதமானதால் பாபி சிம்ஹா போன்ற நடிகர்கள் வேறு படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டார்கள். பல டெக்னீஷியன்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாததால் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அதோடு வருகிற ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பை நடத்த நான் தயாராக இருப்பதாக சொன்ன பிறகும் எனக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்கள் என்று ஷங்கர் தரப்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதோடு, தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

related posts