வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இலங்கை அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளதாக தேர்வுக்குழுத் தலைவர் பிரமோத்யா தெரிவித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மலிங்காவை ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துக்கொள்ளவில்லை. லீக் போட்டிகளில் இனிமேல் பங்கேற்பதில்லை என மலிங்கா முடிவெடுத்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்தது. இதற்கு முன்பு இலங்கை டி20 அணியின் கேப்டனாக மலிங்கா செயல்பட்டார். எனினும் சமீபத்தில் அணியின் பயிற்சி முகாமில் மலிங்கா பங்கேற்கவில்லை. இதனால் இலங்கை டி20 அணியின் புதிய கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்காக இலங்கை அணியில் மலிங்கா மீண்டும் விளையாட வாய்ப்புள்ளதாக தேர்வுக்குழுத் தலைவர் பிரமோத்யா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
மலிங்காவுடன் விரைவில் பேசுவோம். வருங்கால டி20 தொடர்கள், டி20 உலகக் கோப்பைக்கான எங்களுடைய திட்டங்களில் அவரும் உள்ளார். அடுத்தடுத்து இரு உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. எனவே அவருடன் நாங்கள் பேசவுள்ளோம் என்றார்.
இதுபற்றி மலிங்கா கூறியதாவது:
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்துதான் நான் ஓய்வு பெற்றுள்ளேன், டி20யிலிருந்து அல்ல. என்னைத் தேர்வுக்குழுவினர் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய நானும் ஆவலாக உள்ளேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாடினாலும் என்னால் சிறப்பாகப் பங்களிக்க முடியும் என்பதை நான் பலமுறை நிரூபித்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.