மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது குறித்து மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் மூத்த அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் உத்தவ் தாக்கரே கூறுகையில், இடஒதுக்கீடு ரத்து தொடர்பாக விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மாநில அரசு சட்டம் இயற்றியது. இதை எதிா்த்து மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மாநில அரசு கொண்டுவந்த இடஒதுக்கீடு சட்டத்தை ஏற்றுக்கொண்டது. அதே நேரம், 16 சதவீதம் என்பதை நியாயப்படுத்த முடியாது என்றும், மராத்தா சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பில் 12 சதவீதத்துக்கு மிகாமலும், கல்வியில் 13 சதவீதத்துக்கு மிகாமலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதனைத் தொடா்ந்து, மாநில அரசின் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒரு மனுவில், ‘மகாராஷ்டிர அரசின் எஸ்இபிசி சட்டம், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே நிா்ணயித்துள்ள 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீறுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மராத்தா இடஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று கடந்த 5-ஆம் தேதி தீா்ப்பளித்தது.
இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கூட்டணியும், பாஜகவும் ஒருவரை மற்றொருவா் குற்றம்சாட்டி வருகின்றனா்.