இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இடம்பெற்ற மூத்த வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்கப்போவதில்லை.
எனவே இங்கிலாந்து பயணத்துக்குத் தேர்வாகாத புவனேஷ்வர் குமார், பிரித்வி ஷா, ஹார்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷன் உள்ளிட்டோர் இந்தத் தொடரில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் இதில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
இந்த அணியை வழிநடத்துவதற்கான கேப்டன் பொறுப்பு ஷிகர் தவானிடம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அனுபவம் மற்றும் தில்லி அணியை வழிநடத்தியுள்ள கடந்த கால அனுபவங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர 2018-இல் நிடாஹஸ் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு தவான் துணை கேப்டனாக செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸை சிறப்பாக வழிநடத்தி வரும் ஷ்ரேயஸ் ஐயரும் கேப்டன் பொறுப்புக்கான போட்டியில் இருப்பார். ஆனால், அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் தற்போதைக்கு அந்தப் போட்டி இல்லை.