கொரோனா 2வது அலை இந்தியாவில் அதி தீவிரமாக உள்ளது. தடுப்பு மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நோயால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் அரசு உதவியை தாண்டி பல தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். சில திரைப்பிரபலங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்புக்காக நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் முதல் ஆளாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் சூர்யா, கார்த்தி ரூ.1 கோடி நிதி வழங்கி உள்ளனர். இதற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவகுமார், ‛‛கொரோனா தொற்றிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு உதவ எங்கள் குடும்பத்தின் சார்பில் இந்த தொகையை வழங்கினோம். தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். கருணாநிதியை 40 ஆண்டுகளாக சந்தித்து இருக்கிறேன். இப்போது அவரின் வாரிசை முதல்வராக முதன் முதலில் சந்தித்தது மகிழ்ச்சி என்றார்.