கரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் இந்த வருடம் ரூ. 25 லட்சம் வழங்கிய நிலையில் கடந்த வருடம் மூன்று தரப்புக்கும் சேர்த்து ரூ. 1.50 கோடி வழங்கினார்.
கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு தராளமாக உதவ வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.
தமிழக அரசின் கரோனா தடுப்புப் பணிகளுக்காக இன்று ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் அஜித். வங்கி பரிவர்த்தனை மூலமாக கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் நிதி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் கடந்த வருடம் பிரதமா் நிவாரண நிதி, முதல்வா் நிவாரண நிதி மற்றும் பெப்சி என மூன்று தரப்புக்கும் சேர்த்து மொத்தமாக ரூ. 1.50 கோடி வழங்கினார் அஜித்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியிருந்த தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். இவா்களுக்குத் திரையுலகினா் பல்வேறு உதவிகளை வழங்கினார்கள்.
பிரதமா் நிவாரண நிதி, முதல்வா் நிவாரண நிதி மற்றும் பெப்சி என மூன்று தரப்புக்கும் நிதியுதவி வழங்கினார் அஜித்.
பிரதமா் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம், முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் மற்றும் பெப்சி தொழிலாளா்களுக்கு ரூ. 25 லட்சம் என நிதியுதவி அளித்தார். இந்தத் தொகைகள் 2020 ஏப்ரல் 7 அன்று சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் அஜித் சார்பாகச் செலுத்தப்பட்டது.