நேபாளத்தில், புதிய அரசு அமைப்பதில் கூட்டணி கட்சிகளிடையே தொடர்ந்தும் முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றது.
நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூ., கட்சிக்குள், பிரதமர் சர்மா ஒலிக்கும், முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தா இடையிலான மோதல் முற்றியதை அடுத்து, பார்லி.,யில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சி தோல்வி அடைந்தது.
இதையடுத்து, தகுதியுள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோர, நேற்று வரை, அதிபர் பித்ய தேவி பண்டாரி, ‘கெடு’ விதித்திருந்தார். இதையடுத்து, ஷெர் பகதுார் துபா தலைமையிலான நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூ., கட்சி, உபேந்திரா யாதவ் தலைமையிலான ஜனதா சமாஜ் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி அரசை அமைக்க முடிவு செய்தது.
நேபாள பார்லி.,யில் உள்ள, 271 இடங்களில், கூட்டணி ஆட்சி அமைக்க, 136 இடங்கள் தேவை. ஷெர் பகதுார் துபா கட்சிக்கு, 61 எம்.பி.,க்கள் உள்ளனர். நேபாள கம்யூ., கட்சியில் சர்மா ஒலியை ஆதரிக்கும், 49 எம்.பி.,க்கள், உபேந்திரா கட்சியின், 15 எம்.பி.,க்கள் ஆகியோரை யும் சேர்த்தால், 125 பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது.
ஆட்சி அமைக்க மேலும், 11 எம்.பி.,க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மகந்தா தாகூர் தலைமையிலான, ஜனதா சமாஜ் கட்சியிடம் ஆதரவு கோரப்பட்டது. இக்கட்சிக்கு, 16 எம்.பி.,க்கள் உள்ளனர். ஆனால் புதிய அரசுக்கு ஆதரவளிக்க, மகந்தா தாகூர் மறுத்து விட்டார். இதனால் நேபாளத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.