இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஷஃபாலி வர்மா – ஒருநாள், டெஸ்ட் அணிகளில் இடம்பிடித்துள்ளார். இதுதவிர ஹண்ட்ரெட், டபிள்யூபிபிஎல் போட்டிகளிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகளையும் பெற்றுள்ளார்.
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் அணி, ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள், டெஸ்ட் அணிகளில் 17 வயது ஷாஃபாலி வர்மா முதல்முறையாக இடம்பிடித்துள்ளார்.
ஹரியாணாவைச் சேர்ந்த ஷாஃபாலி டி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். 2019-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 15 வயதில் அறிமுகமானபோது இந்தியாவுக்காக விளையாடும் இளம் வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றார். இதுவரை 22 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்து அசத்தினார்.
அதிரடி ஆட்டத்துக்குப் புகழ் பெற்ற ஷாஃபாலியை ஒருநாள், டெஸ்ட் அணிகளிலும் இடம்பெறச் செய்து கூடுதல் பொறுப்புகளையும் வாய்ப்புகளையும் அளித்துள்ளது பிசிசிஐ.
இங்கிலாந்தில் விரைவில் நடைபெறவுள்ள ஹண்ட்ரெட் போட்டியிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டபிள்யூபிபிஎல் டி20 போட்டியிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளார் ஷஃபாலி வர்மா. டபிள்யூபிபிஎல் டி20 போட்டியில் அறிமுகமாகும் ஷாஃபாலி, சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
குறுகிய காலத்தில் பல முக்கிய வாய்ப்புகளைப் பெற்றுள்ள ஷஃபாலி வர்மா, தற்போது கிடைத்துள்ள நான்கு வாய்ப்புகளையும் எப்படிப் பயன்படுத்தப் போகிறார் என்பதை கிரிக்கெட் உலகம் ஆர்வத்துடன் கவனிக்கப் போகிறது. டி20 ஆட்டங்களில் அசத்தி வருவது போல இதர கிரிக்கெட் போட்டிகளிலும் ஷஃபாலி முத்திரை பதிப்பார் என்றே நம்பலாம்.