1985ஆம் ஆண்டின் மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு ஈழதேசத்தின் முத்தெனத்திகழும் நெடுந்தீவின் மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினியெனும் கடல் வழிப்படகுஅரை மணி நேர பயணத்தின் பின் சிறிலங்கா கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டது. இரு சிறியபிளாஸ்ரிக் படகில் வந்த சிறிலங்கா கடற்படையினர் குமுதினிப் படகை நிறுத்தியபின்னர் அதில் இருந்த 6 கடற்படையினர் முக்கோணக் கூர்க்கத்திகள், கண்டங் கோடாரிகள், இரும்புக்கம்பிகள் சகிதம்குமுதினிப்படகில் ஏறினர். படகின் பின்புறம் இருந்த பயணிகளை படகின் முன்பக்கம் செல்லுமாறு அழைத்துச்சோதனை என்ற பெயரில் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டு கத்தியால் குத்தியும், வாள்கள் மற்றும்கண்டம் கோடரிகளால் வெட்டியும், இரும்புக் கம்பிகளால் தாக்கியும் அந்த படகின் நடுப்பள்ளத்தில் போட்டனர். உயிர்காக்க கடலில் குதித்தவர்களை அந்தக் கொடியவர்கள் துப்பாக்கியால்
சுட்டுக் கொன்றார்கள். கொல்லப்பட்டவர் போக குற்றுயிராய்ப்போனவர்கள் குரல் எழுப்ப முடியாதுசெத்தவர்கள்போல் கிடந்தனர். சிங்கள இனவெறியர்களால் நடாத்தப்பட்ட இக் கோரத் தாக்குதலில் 7 மாதக்குழந்தை உட்பட 70 வயது முதியவர் வரை 36 பேர் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டார்கள். ஏனையோர் படுகாயமடைந்தார்கள். இந்த அவலத்தை, அந்தக் கொடிய தாக்குதலில் இருந்து குற்றுயிரும்குலையுயிருமாகத் தப்பித்த உறவுகள் மனித உரிமை சபைகளுக்குச் சாட்சியமாக அளித்தார்கள். மனிதாபிமானம் மிக்கவர்கள் அரசியல்கட்சிகளிடம் அக்கொடுமைகளை எழுதிய மகஜர்களைக்கையளித்தார்கள். மாபெரும் கண்டனப் பேரணி நிகழ்த்தினார்கள். அக் கண்ணீரைக் கதைகளாய், கவிதைகளாய், கட்டுரைகளாய், நாடகமாய் ஆக்க இலக்கியக் கார்ர்கள் அதனைப் பதிவு செய்தார்கள். ஆங்கிலம் உட்பட அகிலத்தின் பல மொழிகளில் அவற்றை மொழியாக்கம் செய்தார்கள். ஆனால்அதிகாரவர்க்கம் அவை எவற்றையும் இற்றைவரை கண்டு கொள்ளவில்லை. அந்த துயர் சுமந்த நாள் இன்று !
காலறுபட்டு ……..கையறுபட்டு ……..
துடிக்கத் துடிக்க ………
குமுதினி மடியில் உயிர் போன,
என்னுயிர்த் தங்கைகளின்
அழகான கனவுகள் பற்றி …….
இன்னமும் ……. அவர்கள் ……..
வாழ விரும்பிய வாழ்க்கையைப் பற்றி …….
பலமாதமாய், பவித்திரமாய், உருவாகி
கணப்பொழுதில் கருவுடனேயே ……..
சிதையில் எரிந்த என் நண்பனின்,
மனைவி பற்றி ……..
பதைக்கப்,பதைக்க
கொலையுண்டு கிடந்த
பச்சை மழலை சுபாஜினி பற்றி …..
மரணிக்கும் போதும்,
எதிரியிடம் மண்டியிடாது
உயிர் விட்ட என்னூர்- வீர
அன்னைகள் பற்றி ……
என்னினிய உணர்வில்
தமிழைக் கலந்து,
தன்னுயிரைக் கூலிப்படைக்கு
காவு கொடுத்திட்ட என்
தமிழாசிரியர் சதாசிவம் பற்றி …….
எவரைப்பற்றி …….
எவரைப்பற்றி ……..
நாம் புலம்பி அழுவோம் ????
அந்தக் கோரக்கொலைகளின் உளத்தை உருக்கும் சாட்சியமாயும்,சத்தியமாயும் மனித உரிமை சபைக்குசாட்சியமளித்தவர்கள் திருமதி
சறோ இராசரத்தினம்,அன்புக் குழந்தையை பறிகொடுத்த அன்னலட்சுமி சிவலிங்கம், கணபதிப்பிள்ளை ஆனந்தகுமார், குமாரசாமி,
கணேசபிள்ளை என்று பலர்.
குமுதினிப் படகினுள் எம்மினியஉடன் பிறப்புகளை கொன்றொழித்த கயவர்களை நயினாதீவின் கடற்படைமுகாமினுள்ளே இனம் காட்டுவேனென துணிந்து மனித உரிமைச்சபையினுக்கு வாக்குமூலம் அளித்தவர்காங்கேசு சாந்தலிங்கம். ஐரோப்பிய நாடொன்றில் புலம் பெயர்ந்து அகதியாக வாழும் அவருக்குஅகதியந்தஸ்தைக் கூட அந்த நாடு மறுத்து வருகின்றது.
சிங்கள இனவெறியரசின் கூலிப்படைகளால் கடல்ப் பெருவெளியில் கொன்றொழிக்கப்பட்ட எம்நெடுந்தீவகத்து உடன் பிறப்புகளினை நாம் இழந்து இன்றோடு 36 வருடங்களாகின்றன. இத்தனைசாட்சியமிருந்தும் இனவாதப் பேய்களின் ஒரு மயிரைத் தன்னும் எம்மால் இதுவரை பிடுங்கிவிட முடியவில்லை. இலங்கையரசினால் வேண்டுமென்றே மறக்கடிக்கப்பட்டு ,நீதி மறுக்கப்பட்டு மூன்றரைத் தசாப்தங்களாககிடப்பிலே போடப்பட்டிருக்கும் இக்கோர மரணங்களின் மர்மங்களை,அநீதியை இன்னமும் கூட உலகம் கண்டுகொள்ளவிரும்பவில்லை. இன வாதப் பெரும்பேய்கள் நெடுந்தீவு மாந்தரை நிலைகுலையச் செய்த இக் கொடூரச்செயலைக் கண்டித்து நெடுந்தீவகத் தாயக உறவுகளும், கனேடிய மற்றும் பிரித்தானிய நல்லுறவுகளும்வருடாவருடம் நினைவெழுச்சி நிகழ்வுகளையும் அஞ்சலிப் பிரார்தனைகளையும் நிகழ்த்தி வருகின்றார்கள்.