இஸ்ரேல் இராணுவத்தினருக்கும், ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் மேலும் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காசா எல்லைப்பகுதியில் நிலை கொண்டுள்ள இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில் நேற்று 10 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மோதலின் போது இஸ்ரேல் துருப்பினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன், இறப்பர் குண்டு தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஹமாஸ் கிளர்ச்சியாளர்களும் இராணுவத்தினர் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.
இந்த காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
இரு தரப்பு மோதலில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் காசா முனையில் ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உட்பட 126 பேரும் இஸ்ரேலில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காசா முனை மீது தாக்குதல் நடத்த விமானப்படையுடன் சேர்த்து தரைப்படையையும் இஸ்ரேல் களமிறக்கியுள்ளது. இதனால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காசா முனையில் வசித்து வந்த பாலஸ்தீனர்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.