சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திலிருந்து வந்திருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அவர்களது மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி தமிழகத்திலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக மன்னாரை வந்தடைந்த ஒருவர் அங்கிருந்து பேருந்து மூலம் யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதிக்கு வந்து மறைந்திருந்த வேளை இனம்காணப்பட்டு, கைது செய்யப்பட்டு காரைநகர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதேவேளை கடந்த 12ஆம் திகதி தமிழகத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக யாழ்ப்பாணம் குருநகர் பகுதிக்கு வந்து பதுங்கியிருந்த வயோதிப பெண் , அவரது மகள் மற்றும் அவரது இரண்டு பேரப்பிள்ளைகள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் ஒரு குழந்தைக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்றா அவர்களுக்கு ஏற்பட்டது என்பதனை கண்டறிய அவர்களது மாதிரிகள் கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.