தில்லியில் கரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை விமரிசித்து சுவரொட்டி (போஸ்டர்) ஒட்டியதற்காக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட அந்த சுவரொட்டியில், “நமது குழந்தைகளின் தடுப்பூசிகளை எதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்புனீர்கள் பிரதமர் நரேந்திர மோடி?” என்று குறிப்பிட்டிருந்ததாக தில்லி காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் இதுபற்றி தெரிவித்தது:
“இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு புகார்கள் பெறப்பட்டால் மேலும் வழக்குகள் பதிவு செய்யப்படும். தற்போதைக்கு யார் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார் அவர்.