‘2-டிஜி’ தடுப்பு மருந்து ஜூன் மாதத்திலிருந்து நாடு முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பவுடர் வடிவில் நீரில் கலந்து குடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘2-டிஜி’ (டியோக்ஸி டி குளுக்கோஸ்) தடுப்பு மருந்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று (மே 17) அறிமுகம் செய்து முதல்கட்ட விநியோகத்தைத் தொடக்கி வைத்தனர்.
இதனிடையே இது குறித்து பேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி,
முதற்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை, பாதுகாப்புத் துறை மருத்துவமனை மற்றும் டிஆர்டிஓ மருத்துவமனைகளில் மட்டுமே 2-டிஜி தடுப்பு மருந்து கிடைக்கும்.
ஆனால் வரும் ஜூன் மாதத்திலிருந்து நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தடுப்பு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
தடுப்பு மருந்திற்கான உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதால், இம்மாத இறுதி வாரத்தில் இரண்டாம் கட்ட ‘2-டிஜி’ தடுப்பு மருந்து கிடைக்கும் என்று கூறினார்.