செசல்ஸ் நாட்டில், 60% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
தீவு தேசமான செசல்ஸ் நாட்டில் தமிழர்களும் அதிகம் வசிக்கின்றனர். இங்கு பெரிய நவசக்தி விநாயகர் கோவில் ஒன்றே இருக்கிறது. இந்த தீவின் மொத்த மக்கள் தொகை 98 ஆயிரம் ஆகும். இங்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பெரியளவில் தடுப்பூசி இயக்கத்தை தொடங்கினர். தற்போது வரை மக்கள் தொகையில் 61.4% பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கைவிட்டனர். சுற்றுலாவை சார்ந்தே அந்நாட்டின் 72% வருமான என்பதால், நெகடிவ் டெஸ்ட் முடிவுகளுடன் வருபவர்களை தனிமைப்படுத்தாமல் அனுமதித்தது.
அந்த சமயத்தில் நாட்டில் 3,800 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. 16 பேர் இறந்திருந்தனர். அதன் பின்னர், தற்போது மொத்த பாதிப்பு 9,184 ஆக உயர்ந்தது. இறப்பு எண்ணிக்கை 32 ஆனது. வியாழன் நிலவரப்படி செயலில் உள்ள தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,700 ஆகும். அவர்களில் 33% பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, செசல்ஸ் மக்களுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு போடப்பட்டுள்ளது. 57% மக்களுக்கு சினோபார்மும், 43% மக்களுக்கு கோவிஷீல்டும் போடப்பட்டுள்ளன. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 20% பேர் தடுப்பூசி போட்டவர்கள். ஆனால் அவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படவில்லை, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் யாரும் இறக்கவில்லை என்று சுகாதார அமைச்சகம் கூறியிருக்கிறது.