கடந்த 3 மாதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 2,14,950 புதிய அரிசி அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவர்களுக்கும் முதல் தவணையாக ரூ. 2,000 இம்மாதமே வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கரோனா நிவாரண நிதியால் மேலும் 2 லட்சம் குடும்பங்கள் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி:
தமிழ்நாடு பேரவை தேர்தல்–2021 தொடர்பாக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், கரோனா தொற்றால் செயல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் கலைஞர் பிறந்த திருநாள் முதல் ரூ. 4000/- வழங்கப்படும் என முதல்வர் உறுதியளித்திருந்தார்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4153.39 கோடி செலவில், மே 2021 மாதத்தில் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2,14,950 புதிய அரிசி குடும்ப அட்டைகளை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வாழ்வாதாரத்திற்கும் மேற்கூறிய உதவியை வழங்கிடும் வகையில், ரூ.42.99 கோடி செலவில் மே 2021 மாதத்தில் ரூ.2,000/- நிவாரணத் தொகையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.