Home விளையாட்டு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் விருப்பம் 7 டெஸ்டுகளிலும் விளையாடுவேன்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் விருப்பம் 7 டெஸ்டுகளிலும் விளையாடுவேன்

by admin
இங்கிலாந்து அணி அடுத்து விளையாடவுள்ள ஏழு டெஸ்டுகளிலும் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்.
கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் பிராடுக்கு இடம் கிடைக்கவில்லை. அந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. எனினும் பிராட் இடம்பெற்ற மீதமுள்ள இரு டெஸ்டுகளையும் வென்று 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது. இங்கிலாந்து அணியின் தொடர் நாயகனாகத் தேர்வான பிராட், அத்தொடரில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளைப் பூர்த்தி செய்தார்.
முதல் டெஸ்டில் விளையாடாத பிராட், 8 ஆண்டுகள் இடைவெளியில் முதல் முறையாகச் சொந்த நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தைத் தவறவிட்டார். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தொடர்ந்து ஆறு டெஸ்டுகளில் இங்கிலாந்து அணி விளையாட இருந்ததால் அனைத்து வீரர்களுக்கும் தகுந்த ஓய்வளித்து, தேவைப்படும் நேரத்தில் மட்டும் பயன்படுத்த அணி நிர்வாகம் முடிவெடுத்தது. இதன்மூலம் நல்ல உடற்தகுதியுடன் வீரர்களால் ஆட்டத்தில் பங்களிக்க முடியும் என நிர்வாகம் நம்பியது. அதனால் முதல் டெஸ்டில் பிராடைச் சேர்க்கவில்லை.
முதல் டெஸ்டிலிருந்து தன்னை நீக்கியதற்கு வருத்தமும் கோபமும் அடைந்தார் ஸ்டூவர்ட் பிராட். ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தன் கோபத்தையும் வருத்தத்தையும் மறைக்காமல் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: முதல் டெஸ்டில் என்னைச் சேர்த்துக் கொள்ளாமல் போனதற்காக ஏமாற்றமடைந்தேன் என்று மட்டும் சொல்வது சரியாக இருக்காது. நான் கோபமும் வெறுப்பும் அடைந்துள்ளேன். என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கடந்த சில வருடங்களாகச் சிறப்பான முறையில் பந்துவீசியுள்ளேன். அணியில் எனக்கான இடம் உள்ளது என நினைக்கிறேன். ஆஷஸ் தொடரில் விளையாடினேன். தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்று வெற்றி பெற்றோம். நேற்றிரவு தேர்வுக் குழுத் தலைவரிடம் பேசினேன். 13 வீரர்களின் தேர்வில் அவர் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் ஆடுகளத்தின் தன்மையைக் கொண்டே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். எனது எதிர்காலம் குறித்து எனக்குத் தெளிவான விளக்கம் வேண்டும். அதுகுறித்து நேர்மறையான பதில் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்தது என்றார்.
இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் நியூசிலாந்து, இந்தியா ஆகிய இரு அணிகளுக்கும் எதிராக 7 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. இதுபற்றி ஸ்டூவர்ட் பிராட் ஒரு பேட்டியில் கூறியதாவது:
ஏழு டெஸ்டுகளிலும் நான் விளையாடப் போகிறேனா? இல்லை. தகவல் பரிமாற்றம் சரியாக இருந்தால் காரணத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். என்னைக் கேட்டால் ஏழு டெஸ்டுகளிலும் விளையாட விருப்பமாக உள்ளேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் நான் விளையாடுவதில்லை. எனவே நல்ல உடற்தகுதியுடன், புத்துணர்ச்சியுடன் டெஸ்டில் விளையாடத் தயாராக உள்ளேன். ஆனால் சில வீரர்களுக்கு அனுபவம் தேவை, வித்தியாசமான கூட்டணி தேவை என்று கிறிஸ் சில்வர்வுட் முடிவெடுத்து அது சரியாக விளக்கப்பட்டால் சூழலை நான் புரிந்துகொள்வேன் என்றார்.

related posts