கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் கொலணியாக மாற்றப்படும் என தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. முற்றாக எமது நாட்டின் சட்டத்திற்குட்பட்டு, எமது நாட்டின் ஒரு பகுதியாகவே செயற்படும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவிக்கையில், கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியிலும் இதன் உண்மை நிலை தெரியாமல் இருக்கி்ன்றது. எதிர்க்கட்சியினரின் பொய் பிரசாரத்தினாலே மக்கள் மத்தியிலும் இதுதொடர்பில் சந்தேகம் எழுந்திருக்கின்றது. ஆனால் கொழும்பு துறைமுக நகர திட்டம் எமது பொருளாதாரத்துக்கு பாரிய சக்தியாக அமையும்.
அத்துடன் உலகில் 147 நாடுகளில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருளாதார வலயங்கள் இருக்கின்றன. அதனால் இது புதிய வேலைத்திட்டம் அல்ல. 1975ஆம் ஆண்டில் இருந்து விசேட பொருளாதார வலய மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கொழும்பு துறைமுக நகரமும் அந்த அடிப்படையில் அமைக்கப்பட்டதொன்றாகும். இந்த துறைமுக நகரின் சட்ட திட்டங்கள் அனைத்தும் எமது நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாகவே அமைந்திருக்கும். எமது நாட்டு சட்டத்துக்கு முரணாக செற்பட நாங்கள் இடமளிக்கப்போவதில்லை.
மேலும் கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் கொலணியாக அமைந்துவிடும் என எதிர்க்கட்சி தெரிவித்து வருகின்றது. இவ்வாறு சீன கொலணியாக அமையும் என தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. அதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதும் இல்லை. மாறாக கொழும்பு துறைமுக நகரம் எமது நாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கும். கடலை நிரப்பி அமைக்கப்படும் இவ்வாறான துறைமுக நகரங்கள் உலகில் 46 இருக்கின்றன.
எனவே கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் மூலம் நாட்டில் பாரிய பொருளாதார மறுமலரச்சி ஏற்படும். அதேபோன்று துறைமுக நகரில் 80வீதமான தொழில் வாய்ப்புக்கள் இலங்கையர்களுக்கே வழங்கப்படுகின்றது. அதன் மூலம் எமது நாட்டு மக்களுக்கு பாரியளவில் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறுகின்றன என்றார்.