Home இந்தியா கோவிஷீல்ட் செலுத்திக் கொண்டோருக்கு ரத்தக் கசிவு, ரத்தக் கட்டு பிரச்னை: மத்திய அரசு

கோவிஷீல்ட் செலுத்திக் கொண்டோருக்கு ரத்தக் கசிவு, ரத்தக் கட்டு பிரச்னை: மத்திய அரசு

by admin
ந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி செலுத்திக் கொண்டோரில் சிலருக்கு ரத்தக் கசிவு, ரத்தக் கட்டு பிரச்னை ஏற்படும் வாய்ப்பிருப்பதை ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. எனினும், கோவேக்ஸின் செலுத்தப்பட்டோரிடையே அத்தகைய பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய பிறகு, தடுப்பூசி காரணமாக பாதிப்பு ஏற்பட்டதாக 23,000 சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும், அதில் 700 சம்பவங்களில் தீவிரமான பாதிப்பு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆஸ்ட்ராஜெனிகா – ஆக்ஸ்ஃபோா்டு இணைந்து தயாரித்த ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு ரத்தக் கசிவு, ரத்தக் கட்டு பாதிப்பு ஏற்பட்டதாக சில நாடுகளில் இருந்து எச்சரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, இந்தியாவிலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பிறகான பாதிப்பு தொடா்பாக ஒரு அவசர ஆய்வு நடத்தப்பட்டது.
‘தடுப்பூசி பாதிப்பை அறியும் தேசிய குழு’ (ஏஈஎஃப்ஐ) நடத்திய அந்த ஆய்வின்படி, ஏப்ரல் 3-ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் 7,54,35,381 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் கோவிஷீல்ட் தடுப்பூசி 6,86,50,819 டோஸ்களும், கோவேக்ஸின் தடுப்பூசி 67,84,562 டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.
மொத்த டோஸ்களில் முதல் தவணையாக 6,59,44,106 டோஸ்களும், 2-ஆவது தவணையாக 94,91,275 டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் இருந்து தடுப்பூசி செலுத்திய பிறகு பாதிப்பு ஏற்பட்டதாக 23,000-க்கும் அதிகமான சம்பவங்கள் ‘கோ-வின்’ தளத்தில் பதிவாகியுள்ளன. மொத்தம் 753 மாவட்டங்கள் உள்ள நிலையில், 684 மாவட்டங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மொத்தம் பதிவானதில் 700 சம்பவங்கள் மட்டுமே தீவிரமான பாதிப்பு உடையவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் 498 சம்பவங்களில் ‘தடுப்பூசி பாதிப்பை அறியும் தேசிய குழு’ தனது ஆய்வை நிறைவு செய்துள்ளது. அதன்படி, கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்ட 26 சம்பவங்களில் தொடா்புடையோருக்கு ரத்தக் கசிவு, ரத்தக் கட்டு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இது குறைவே. 10 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டால், அதில் 0.61 சம்பவங்களே அவ்வாறு பாதிப்பு இருப்பதாக பதிவாகிறது. இதுவே பிரிட்டனில் 4 சம்பவங்களாகவும், ஜொ்மனியில் 10 சம்பவங்களாகவும் உள்ளது.
நாட்டில் கோவேக்ஸின் செலுத்தப்பட்டோரிடையே இத்தகைய பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் தடுப்பூசி (குறிப்பாக கோவிஷீல்ட்) செலுத்தப்பட்டு 20 நாள்களுக்குப் பிறகு ரத்தக் கசிவு, ரத்தக் கட்டு பாதிப்பு ஏற்பட்டால், தடுப்பூசி செலுத்திக் கொண்ட இடத்திலேயே அதைத் தெரிவிக்குமாறு பயனாளா்களுக்கும், சுகாதார ஊழியா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
கரோனா தொற்றை தடுப்பதிலும், அந்தத் தொற்று பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பை குறைப்பதிலும் தகுந்த ஆற்றல் கொண்ட தடுப்பூசியாகவே கோவிஷீல்ட் தொடரும். கடந்த மாதம் 27-ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் அந்தத் தடுப்பூசி 13.4 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசிகளின் தன்மை, தடுப்பூசி செலுத்தப்பட்டோரிடையே ஏற்படும் பாதிப்பு ஆகியவை தொடா்பாக மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
பாதிப்பின் தன்மைகள்: மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, கைகளில் வலி அல்லது வீக்கம், தடுப்பூசி செலுத்தப்பட்ட இடத்தைச் சுற்றி சிவப்பு நிற தடிப்புகள், வாந்தியுடனோ அல்லது இல்லாமலோ தொடா்ச்சியான வயிற்று வலி, வாந்தியுடனோ அல்லது இல்லாமலோ தொடா்ச்சியான தலைவலி, சோா்வு, கை உள்பட உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் செயலற்ற நிலை, காரணமின்றி வாந்தி, மங்கலான பாா்வை அல்லது இரட்டையாகத் தெரிதல், மனநெருக்கடி, அடிக்கடி மனநிலையில் மாற்றம் போன்றவை தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts