இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்கிறது.
சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றிய இந்திய அணி, ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றது. நியூசிலாந்துடன் இந்திய அணி மோதவுள்ளது. செளதாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் 4,000 ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்கள். இதற்கடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்டுகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.
கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு ஒருநாள் முன்பு விக்கெட் கீப்பர் சஹா, கரோனாவால் பாதிக்கப்பட்டார். தற்போது கரோனாவிலிருந்து அவர் மீண்டுவிட்டார்.
மும்பையில் வசிக்கும் வீரர்கள் தவிர இங்கிலாந்து செல்லும் இந்திய அணியினர் அனைவரும் மும்பையில் இரு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கரோனாவிலிருந்து மீண்டுள்ளதால், சில நாள்கள் குடும்பத்தினருடன் தங்கிவிட்டு அடுத்த வாரம் மும்பைக்கு வருவதாக சஹா வைத்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சஹாவின் உடற்தகுதியில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதைச் சமாளிப்பதற்காக இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் சஹாவுக்கான மாற்று வீரராக ஆந்திராவைச் சேர்ந்த கே.எஸ். பரத் தேர்வாகியுள்ளார். இதனால் மும்பை வந்துள்ள பரத், மற்ற வீரர்களைப் போல விடுதி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்திய அணியினர் ஜூன் 2 அன்று இங்கிலாந்துக்குப் புறப்படுகிறார்கள்.