இத்தாலியில் இடம்பெற்ற கேபள் கார் விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு இத்தாலியின் மலை பங்கான பகுதியில் இயக்கப்படும் கேபள் கார் சேவையில் ஈடுபடும் கார்களே விபத்திற்குள்ளாகியுள்ளன.
சுமார் ஆயிரத்து 400 மீற்றர் உயரத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்லும் கேபள் கார் சேவை மலை உச்சியிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றது. காயமடைந்த குழந்தையொன்றின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாலி பிரதமர் மரியோ டெராகி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் வெளிநாட்டவர்களாக இருக்கலாமென சம்பத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பலத்த காயங்களுக்குள்ளான 5 வயது குழந்தையொன்றுக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளதாக இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை முன்னெடுக்கப்படும் குறித்த கேபள் கார் சேவை குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
உரிய முறையில் குறித்த கேபள் கார் சேவையின் தரம் பேணப்படாமையே விபத்திற்கு காரணமெனவும் அது குறித்து உரிய அதிகாரிகள் அவதானம் செலுத்தவில்லையெனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.