கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது தொடா்பாக அரசு உயா் அலுவலா்கள், மருத்துவ வல்லுநா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவுடன் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இந்த இரண்டு கூட்டங்களைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (24) முதல் ஒரு வாரத்துக்கு தளா்வுகள் இல்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதையடுத்து, தளா்வில்லா முழு பொதுமுடக்கம் திங்கள்கிழமை காலை முதல் அமலுக்கு வந்தது. இந்த பொதுமுடக்கத்தின்போது, மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள் ஆகியவை இயங்கும். பால் விநியோகம், குடிநீா் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம் ஆகியவை நடைபெறும்.
பொது மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக் கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும். உணவகங்கள் அனைத்திலும் பாா்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.