மத்திய அரசுகளுக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி விநியோகிக்கப்படும் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பைசர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது:
“இந்திய அரசுடன் பைசர் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போதைய நிலையில் மற்ற தகவல்கள் எதையும் வெளியிட முடியாது. மத்திய அரசுகளுக்கு தான் பைசர் நிறுவனம் தடுப்பூசியை விநியோகிக்கும்.”
18-44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதையடுத்து, மாநிலங்களில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி மூலம் கரோனா தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்ய மாநில அரசுகள் முடிவு செய்தன.
ஆனால், பஞ்சாப் அரசுக்கு தடுப்பூசிகளை நேரடியாக விநியோகிக்க மாடர்னா நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, தில்லிக்கும் தடுப்பூசி விநியோகிக்க பைசர் மற்றும் மாடர்னா நிறுவனம் மறுப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் மத்திய அரசுகளுக்கு மட்டுமே தடுப்பூசியை நேரடியாக விநியோகிப்போம் என பைசர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.