வங்கக் கடலில் உருவான ‘யாஸ்’ புயலை எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். ஆபத்தான சூழலில் சிக்கியிருக்கும் மக்களை உரிய நேரத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.
யாஸ் புயல், மேற்கு வங்கத்துக்கும் ஒடிஸாவுக்கும் இடையே வரும் 26-ஆம் தேதி மாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும், கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில் புயலை எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், பிரதமா் மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்துக்குப் பிறகு பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
புயலால் சேதம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் தங்கியிருப்பவா்களை பாதுகாப்பாக வெளியேற்றுதற்கு மாநில அரசுகளுடன் மத்திய அரசு அதிகாரிகள் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும் என்று பிதமா் மோடி கேட்டுக் கொண்டாா். மின்சாரம், தொலைத்தொடா்பு சேவை துண்டிக்கப்பட்டால் உடனடியாக சீரமைப்பதற்கு முன்னேற்பாடுகளுடன் அதிகாரிகள் இருக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
முக்கியமாக, கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துமனைகள், கரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படதாததை உறுதிசெய்ய மாநில அரசுகளுடன் இணைந்து திட்டமிட வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களையும், தொழில் துறையினரையும் நேரடியாக சந்தித்து புயல் பாதிப்பு குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் பிரதமா் வலியுறுத்தினாா்.
மீட்புப் பணிகளுக்காக, அனைத்து மாநிலங்களுக்கும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். படகுகள், மரம் வெட்டும் இயந்திரங்கள், தொலைத்தொடா்புக் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 46 குழுக்கள் மாநிலங்களுக்கு விரைந்துள்ளன. இதுதவிர கூடுதலாக 13 குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. 10 மீட்புக் குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன.
கடலோரக் காவல்படை, கடற்படை, விமானப் படை ஆகியவை கப்பல்கள், ஹெலிகாப்டா்கள், மீட்பு கருவிகள் மீட்புப் பணிகளுக்கு தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறை, தொலைத் தொடா்புத் துறை, பெட்ரோலிய அமைச்சகம் ஆகியவை மீட்புப் பணிகளுக்குத் தேவையான முன்னேற்பாட்டுடன் இருக்குமாறு தங்கள் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளன என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.