பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்ற ஏழு பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள். இவர்களில் ஆறு பேர் வீரர்கள். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அணி உரிமையாளர்களும் கலந்து பேசி, பிஎஸ்எல் போட்டியை ஒத்திவைப்பது எனக் கடந்த மார்ச் 4-ல் முடிவெடுத்தார்கள். இந்த வருட பிஎஸ்எல் போட்டியின் 34 ஆட்டங்களில் 14 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அனைத்து ஆட்டங்களும் கராச்சி மற்றும் லாகூரில் நடைபெற இருந்தன. முதல் 20 ஆட்டங்கள் கராச்சியிலும் மீதமுள்ள 10 லீக் ஆட்டங்களும் நான்கு பிளேஆஃப் ஆட்டங்களும் லாகூரில் நடைபெற இருந்தன. கரோனா பாதுகாப்பு வளையத்தில் அணியின் வீரர்களும் பயிற்சியாளர்களும் இருந்தபோதும் ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் பிஎஸ்எல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட 6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி அபுதாபியில் நடைபெறவுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் போட்டி தொடங்கவுள்ளது. ஆறு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் கராச்சி மற்றும் லாகூரிலிருந்து தனி விமானங்களில் நாளை அபுதாபிக்குச் செல்கிறார்கள். பாகிஸ்தானிலிருந்து வரும் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழு நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படவுள்ளார்கள்.
இந்நிலையில் முல்தான் சுல்தான்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் சாஹித் அப்ரிடி காயம் காரணமாக பிஎஸ்எல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பயிற்சியில் ஈடுபடும்போது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டதால் இந்நிலை ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.