முதல் ஒருநாள் ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது வங்கதேச அணி. 2-ம் ஒருநாள் ஆட்டம் டாக்காவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 15.4 ஓவர்களில் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி. பிறகு ஜோடி சேர்ந்த முஷ்ஃபிகுர் ரஹிமும் மஹ்முதுல்லாவும் நல்ல கூட்டணி அமைத்தார்கள். மஹ்முதுல்லா 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் 84 ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம் இன்றும் சிறப்பாக விளையாடி சதமடித்தார். 125 ரன்களுடன் கடைசியாக ஆட்டமிழந்தார். இது அவருடைய 8-வது ஒருநாள் சதமாகும்.
வங்கதேச அணி 48.1 ஓவர்களில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணித் தரப்பில் துஷ்மந்தா, சண்டகன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் இலங்கை அணிக்கு 40 ஓவர்களில் 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டும் எடுத்து 103 ரன்கள் வித்தியாசத்தில் (டி/எல் முறையில்) தோல்வியடைந்தது. மெஹிடி ஹசன் மிராஸ், மிஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகித்து ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் முதல்முறையாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றுள்ளது. 3-வது ஒருநாள் ஆட்டம் மே 28 அன்று டாக்காவில் நடைபெறவுள்ளது.