பணமதிப்பிழக்க நடவடிக்கைக்குப் பின் புழக்கத்தில் விடப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டது. இதற்கிடையே தற்போது புழக்கத்திலிருந்தும் 2000 ரூபாய் நோட்டுகள் குறைக்கப்பட்டு வருகிறது.
அதாவது, 2021-ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.57,757 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்திலிருந்து திரும்பப் பெற்றுள்ளதாக ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-ஆம் நிதியாண்டில் நாட்டில் ரூ.5,47,952 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்தன. ஆனால், இது 2021-ஆம் ஆண்டில் ரூ. 4,90,159 கோடியாகக் குறைந்துள்ளது.
அதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.57,757 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு வருவது எந்தக் காரணத்துக்காக என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்த நடைமுறையை 2019-ஆம் ஆண்டு முதலே ரிசர்வ் வங்கி பின்பற்றி வருவதாகவும், அந்த ஆண்டில் மட்டும் ரூ.14,400 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021 மார்ச் மாத நிலவரப்படி, நாட்டில் ஒட்டுமொத்தமாக பணப்புழக்கத்திலிருக்கும் ரூபாய் நோட்டுகளில் 17.3% 2000 ரூபாய் நோட்டுகளாகும். இது 2021ல் 22.6% ஆக இருந்தது. அதாவது, பணமதிப்பில் பார்த்தால் நாட்டில் ஒட்டுமொத்தமாக ரூ.28.26 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.4.9 லட்சம் கோடி. இதுவே 2020-ல் ரூ.5.47 லட்சம் கோடியாக இருந்தது.