Home உலகம் சீனாவில் மூன்று பிள்ளைகள் பெற்றுக்கொள்ள அனுமதி

சீனாவில் மூன்று பிள்ளைகள் பெற்றுக்கொள்ள அனுமதி

by Jey

சீனாவைச் சேர்ந்த தம்பதியர், மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள, அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

நம் அண்டை நாடான சீனாவின் மக்கள் தொகை கடுமையாக உயர்ந்ததை அடுத்து, 1980க்கு பின், ‘நாம் இருவர்; நமக்கு ஒருவர்’ என்ற குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையை அந்நாட்டு அரசு வலியுறுத்தியது. மக்கள் தொகை உயர்வு கட்டுக்குள் வந்ததை அடுத்து, 2015 முதல் ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ என்ற கொள்கையை அறிவித்தது.

இந்நிலையில், சீனாவின் மக்கள் தொகை புள்ளி விபரங்களை, அந்நாட்டு அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதில், உழைக்கும் வயதைச் சேர்ந்த 15 – 59 வயது வரையிலானவர்களின் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளில், 70 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக குறைந்துள்ளது.

65 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 9 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு குழந்தை பிறப்பின் விகிதம், அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஐந்தில் ஒரு பங்காக குறைந்தது தெரியவந்தது.

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்துள்ளது, அந்நாட்டு அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.இதையடுத்து, சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘பொலிட் பீரோ’ கூட்டம் நேற்று நடந்தது. இதில், இளம் வயதினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய நிலையில் நாடு உள்ளதால், சீன தம்பதியர், மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

related posts