சிறார் மட்டுமின்றி வயது வந்தோருக்கும் பாதிரியார்கள் பாலியல் தொல்லை தருவதை கிரிமினல் குற்றமாக்கும் சட்ட திருத்தம் வத்திக்கான் நகரில் அமலுக்கு வந்துள்ளது.
ஐரோப்பாவின் இத்தாலியில் உள்ளது வத்திக்கான் நகரம். இங்கு சிறாருக்கு பாலியல் தொல்லை தரும் பாதிரியார்கள் மீது வழக்கு பதிவு செய்யும் சட்டத்தை கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் சமீபத்தில் அமல்படுத்தினார்.இந்நிலையில் சிறார் மட்டுமின்றி வயது வந்தோரும் பாதிரியார்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாகும்பட்சத்தில் அதை கிரிமினல் குற்றமாக பதிவு செய்வதற்கான சட்ட திருத்தத்தை அறிவித்தார்.
இதன்படி வயது வந்தோருக்கு பாலியல் தொல்லை தரும் பாதிரியார்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் பாதிரியார்களின் மதப் பிரசங்கத்திற்கு தடை விதிக்கப்படும். வெள்ளை அங்கி அணியும் உரிமை பறிக்கப்படும்.இதே போல கத்தோலிக்க தேவாலயங்களில் பணியாற்றுவோர் தங்களுக்கு கீழ் பணியாற்றும் சிறார் அல்லது வயது வந்தோருக்கு பாலியல் தொல்லை தருவதை கிரிமினல் குற்றமாக்கும் சட்ட திருத்தமும் அமலுக்கு வந்துள்ளது.