உலக அளவில் கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வருகிறது. அதுபோல, புதிதாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறியிருப்பதாவது:
பொதுமக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதுடன், வேகமாக பரவும் வகையாக ‘டெல்டா’ (பி.1.617.2) வகை தீநுண்மி வரையறுக்கப்பட்டுள்ளது. மற்ற இரு உருமாறிய வகைகள் ( பி.1.617.1 மற்றும் பி.1.617.3) குறைவான பரவல் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகைகளாக கண்டறியப்பட்டிருக்கின்றன. ‘டெல்டா’ வகை கரோனா இப்போது 62 நாடுகளில் பரவியிருக்கிறது.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘கப்பா’ (பி.1.617.1) வகை தொற்று குறிப்பிட்ட பகுதிகளில் வேகமான பரவலைக் கொண்டிருந்தபோதும், உலக அளவில் இந்த வகை கரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
மூன்றாவது வகையான பி.1.617.3, இதுவரை அச்சுறுத்தக் கூடிய வகையிலானதா, அல்லது மிதமானதா என இதுவரை வரையறுக்கப்படவில்லை.
இதனிடையே, ஐ.நா. அகதிகளுக்கான தூதரின் (யுஎன்ஹெச்சிஆா்) செய்தித் தொடா்பாளா் ஆண்ட்ரெஜ் மாகிக் ஜெனீவாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசும்போது, ‘இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வகை, துணைக் கண்டத்தில் அகதிகள் உள்பட அனைவருக்கும் மிக வேகமாக பரவும் அபாயத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஐ.நா. அகதிகள் முகமை எச்சரிக்கையும் விடுத்தது’ என்றாா்.
இந்தியாவில் பாதிப்பு விகிதம் 26 சதவீதம் குறைவு: இந்தியாவில் கடந்த வாரத்தில் 13,64,668 போ் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இருந்தபோதும், அது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 26 சதவீதம் குறைவாகும்.
குறைந்து வரும் உயிரிழப்புகள்: கரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பொருத்தவரை தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவில்தான் அதிக உயிரிழப்புகள் (26,706) பதிவாகியிருக்கின்றன. இருந்தபோதும், இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் குறைவாகும்.
ஒட்டுமொத்தமாக உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் தற்போது தொடா்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் உலக அளவில் 35 லட்சம் போ் புதிதாக கரோனோவால் பாதிக்கப்பட்டனா். இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் குறைவாகும். 78,000 புதிய உயிரிழப்புகள் பதிவாகின. இது முந்தைய வாரத்தைக் காட்டிலும் 7 சதவீதம் குறைவு என்றும் உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது