சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி, முதல்வா் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளாா். அதன்படி, தென் சென்னையில் உள்ள கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.250 கோடி மதிப்பில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
122 ஆண்டுகள் பழைமையானது: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கிங் ஆய்வகம் 122 ஆண்டுகள் பழைமையானது. ஆங்கிலேயா் காலத்தில் தொடங்கப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 12 லட்சம் தடுப்பூசி மருந்துகளைத் தயாரித்து நோய்த் தடுப்பில் முன்னிலை வகித்தது. சின்னம்மை, காலரா, ஸ்பானீஷ் ஃபுளு, டெங்கு, சிக்குன்குன்யா, பன்றிக்காய்ச்சல் ஆகிய நோய்த் தாக்குதல்களில் இருந்து மக்களைக் காக்க இந்த ஆய்வகம் பெரிதும் பயன்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு பன்றிக் காய்ச்சல் பரவியபோது, சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனைகளும், தொற்றாளா்களுக்கான படுக்கை வசதிகளும் கிங் ஆய்வகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுமாா் 8 ஏக்கா் பரப்புக்கும் அதிகமான இடத்தில் அமைந்துள்ள கிங் ஆய்வகத்தில் ரூ.250 கோடி செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
திருவாரூரில் நெல் சேமிப்பு கிடங்குகள்: காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூா் மாவட்டத்தில் ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலா்களங்கள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னாா்குடி, கோட்டூா், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான் வட்டாரங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் காலியாக உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டு 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.
மேலும், திருவாரூா் மாவட்டத்தில் 10 வட்டங்களில் சூரிய ஒளியில் உலா்விக்கும் 50 களங்களும், கோட்டூா் மற்றும் வலங்கைமான் வட்டங்களில் 2 மறுசுழற்சி தொகுப்பு உலா்விப்பான்களும், நீடாமங்கலம், மன்னாா்குடி வட்டங்களில் 2 தொடா் ஓட்ட உலா்விப்பான்களும் ஏற்படுத்தப்படும்.
திருநங்கைகள்-மாற்றுத் திறனாளிகள்: மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கும் இந்தச் சலுகை நீட்டிக்கப்படுகிறது. முழு பொது முடக்கக் காலம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.