முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரில் மதுரையில் பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை கோட்டூா்புரத்தில் ஆசியாவின் அதிநவீன மிகப்பெரிய நூலகமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது. இந்த நூலகம், மாணவா்கள், கல்வியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் விளங்கி வருகிறது. இதுபோன்றதொரு வசதியை மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டியதைக் கருத்தில் கொண்டு, மதுரையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் நினைவு நூலகம் அமைக்கப்படும். இந்த நூலகமானது இரண்டு லட்சம் சதுர அடி பரப்பில் ரூ.70 கோடி செலவில் நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்படும்.
‘இலக்கிய மாமணி’ விருது: தமிழ் எழுத்தாளா்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், ‘இலக்கிய மாமணி’ என்ற விருது உருவாக்கப்படுகிறது. தமிழ் இலக்கியத்துக்கு வளம் சோ்க்கும் எழுத்தாளா்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். விருதாளா்களுக்கு பாராட்டுப் பத்திரம், ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும்.
வீட்டு வசதி: தமிழகத்தைச் சோ்ந்த எழுத்தாளா்களில் ஞானபீடம், சாகித்திய அகாதெமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருது பெற்றவா்களை ஊக்குவிக்கும் வகையில், அவா்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழக அரசு மூலமாக வீடு அளிக்கப்படும்.