லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் பிரேசி, ஒலி ராபின்சன் மற்றும் நியூசிலாந்து அணியில் டேவன் கான்வே என மூன்று வீரர்கள் இந்த டெஸ்டில் அறிமுகமாகியுள்ளார்கள். முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி, 86 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. அறிமுக வீரர் கான்வே 136 ரன்களுடனும் ஹென்றி நிகோல்ஸ் 46 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள்.
1996-ல் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் செளரவ் கங்குலி, தனது அறிமுக டெஸ்டில் 131 ரன்கள் எடுத்தார். இதுவே லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தன. இச்சாதனையை நேற்று 136 ரன்கள் எடுத்து முறியடித்துள்ளார் நியூசிலாந்து வீரரான கான்வே. கங்குலி, கான்வே ஆகிய இருவரைத் தவிர லார்ட்ஸ் மைதானத்தில் மேலும் நான்கு வீரர்கள் அறிமுக டெஸ்டில் சதம் எடுத்துள்ளார்கள்.
தென் ஆப்பிரிக்காவில் பிறந்த 29 வயது கான்வே, ஜோகன்னஸ்பர்க்கில் வாழ்ந்தவர். 2017-ல் நியூசிலாந்துக்கு இடம்பெயர்ந்தார்.
2-ம் நாளன்று நியூசிலாந்து அணி 105 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்தில் முதல் டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை இங்கிலாந்துக்காக விளையாடிய இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சித்சிங்ஜி பெற்றிருந்தார். 1896-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 154 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
125 வருட சாதனையை இன்று முறியடித்துள்ளார் நியூசிலாந்தின் டேவன் கான்வே. ரஞ்சித்சிங்ஜி தனது முதல் டெஸ்டில் எடுத்த 154 ரன்களை இன்றைய ஆட்டத்தின்போது கடந்தார் கான்வே. இதனால் இன்னும் வேறு என்ன சாதனைகளை கான்வே படைப்பார் என்கிற ஆர்வம் ரசிகர்களிடயே ஏற்பட்டுள்ளது.