Home இந்தியா தமிழகம் இரண்டு மிக முக்கியமான நெருக்கடியில் உள்ளது: முதல்வர் ஸ்டாலின்

தமிழகம் இரண்டு மிக முக்கியமான நெருக்கடியில் உள்ளது: முதல்வர் ஸ்டாலின்

by admin
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்ற நிகழ்வில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) மற்றும் அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் இணைந்து, கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நான்கு லட்சம் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.3 கோடி) நிதியாக வழங்கினர். இவர்கள் ஏற்கனவே ரூ.20 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜன் நடராஜன், பாலா சுவாமிநாதன், கால்டுவெல் வேல்நம்பி, பாலகன் ஆறுமுகசாமி, ஜோதி ராதாகிருஷ்ணன், ராம் பிரசாத், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், முதல்வர் ஆற்றிய உரை: கடல்கடந்து வாழும் தமிழர்கள் – தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம்! நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆட்சி அமைக்கும் உரிமையை தமிழ்நாட்டு மக்கள் வழங்கினார்கள். அது உங்கள் அனைவருக்கும் தெரியும். அமெரிக்காவில் இருந்து சில நண்பர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து தி.மு.க.வுக்காக தேர்தல் பரப்புரை செய்ததையும் நான் அறிவேன். கடந்த 7-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். தமிழ்நாடு இப்போது இரண்டு மிக முக்கியமான நெருக்கடியில் உள்ளது.
ஒன்று கரோனா என்ற நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி. இன்னொன்று, கடந்த பத்தாண்டுகளாக ஏற்பட்ட நிதி நெருக்கடி. இந்த இரண்டையும் சமாளிப்பதற்கான முன்முயற்சிகளை நான் முழுமையாகச் செய்து வருகிறேன். கரோனா தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. உறுதியாகச் சொல்கிறேன், விரைவில் முற்றிலுமாக ஒழிப்போம். அதற்கு உதவும் வகையில் சுமார் மூன்று கோடி ரூபாய் நிதியை இன்று நீங்கள் வழங்கி உள்ளீர்கள்.
இந்த நிதியில் பல லட்சம் குடும்பங்கள் தெரிகிறது. கோடிக்கணக்கானவர் முகம் தெரிகிறது. நிதி வழங்கிய அனைவரையும் பெயர் சொல்லி நான் அழைத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி! இதற்கான முயற்சிகளை எடுத்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, தமிழ்நாடு அறக்கட்டளை, ஐஐடி முன்னாள் மாணவர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழர்களுக்காக உதவ முன் வந்த அமெரிக்க மக்கள், தொழில் அதிபர்கள், தொழில் நிறுவனங்கள் ஆகிய அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நோயைக் குணப்படுத்துவது மருந்து மட்டுமல்ல; மற்றவர் ஆறுதலும் ஊட்டும் நம்பிக்கையும் தான்! அத்தகைய நம்பிக்கை விதையை நீங்கள் விதைத்துள்ளீர்கள்! காலத்தால் செய்த நன்றி என்று வள்ளுவர் சொல்வார். அத்தகைய நன்றியைத்தான் நீங்கள் காட்டி இருக்கிறீர்கள். உங்கள் நிதி மக்களை வாழ வைக்கும்! உங்கள் நிதி உயிர் கொடுக்கும்! என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்! தமிழ்நாட்டு மக்களை நாங்கள் மறக்க மாட்டோம் என்று நீங்கள் காட்டி இருக்கிறீர்கள். தமிழ்நாட்டு மக்களாகிய நாங்களும் உங்களை மறக்க மாட்டோம்.
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடி மக்கள் நாம். நீங்கள் புலம் பெயர்ந்து சென்றிருந்தாலும் நம்மை இணைப்பதும் பிணைப்பதும் தாய் மொழியாம் தமிழ் மொழிதான். அந்த தமிழ் போல் வாழ்க என்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். வாழ்க தமிழ்நாடு! மீள்க தமிழ்நாடு! நன்றி வணக்கம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts