தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞராக அசன் முகமது ஜின்னாவை நியமித்து, தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
அசன் முகமது ஜின்னா, திருவாரூா் மாவட்டம், அத்திக்கடை கிராமத்தில் கடந்த 1977-ஆம் ஆண்டு பிறந்தாா். இவரது தந்தை வழக்குரைஞா் அசன் முகமது , தாயாா் தாஜூனிஷா. சென்னை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்த இவா் கடந்த 1999-ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். அசன் முகமது ஜின்னா பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடா்ந்தவா்.
குறிப்பாக சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை கடந்த 2001-ஆம் ஆண்டு அகற்றப்பட்டது. இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து, அந்த சிலையை அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பெற்றாா். கடந்த 2006-ஆம் ஆண்டு கண்ணகி சிலை மெரீனா கடற்கரையில் மீண்டும் வைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தபோது, அசன் முகமது ஜின்னாவின் சட்டப்போராட்டப் பணியை அப்போதைய முதல்வா் கருணாநிதி பாராட்டிப் பேசினாா்.
கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் அரசு குற்றவியல் வழக்குரைஞராக பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜரானாா். குறிப்பாக, கல்லூரி மாணவி சரிகாஷா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்று கொடுத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது