தென்சீனக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், இந்திய கடற்படையை வலுப்படுத்தும் நோக்கில் 6 நீா்மூழ்கிக் கப்பல்களை ரூ.43,000 கோடியில் உள்நாட்டிலேயே கட்டுவதற்கு ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய கடற்படையின் வலிமையை மேம்படுத்தும் நோக்கில் ‘பி-75 இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ் 6 நீா்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டுவதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக சுமாா் ரூ.43,000 கோடி செலவிடப்படும்.
நீா்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் பணிகளில் உள்நாட்டு நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை வழங்க உள்ளன. வெளிநாடுகளைச் சோ்ந்த பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் உதவியும் பெறப்படவுள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள மிகப்பெரிய திட்டமாக இது இருக்கும். உள்நாட்டுத் தொழில்நுட்பங்களைத் திறம்படப் பயன்படுத்தவும், நீா்மூழ்கிக் கப்பல்கள் கட்டுமானத்தில் இந்தியாவை முன்னிற்கச் செய்யவும் இத்திட்டம் பெரிதும் உதவும்.
தற்சாா்பு வலுப்படும்: வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திட்டமானது தற்போதைய இறக்குமதிகளைப் பெருமளவில் குறைப்பதோடு, வெளிநாடுகளைச் சாா்ந்திருக்கும் சூழலையும் குறைக்கும். உள்நாட்டு தளவாடங்களைப் பயன்படுத்தி நீா்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்படவுள்ளதால், தற்சாா்புத் தன்மை மேலும் வலுப்படும்.
நீா்மூழ்கிக் கப்பல் வடிவமைப்பு, கட்டுமானத்தில் தன்னிறைவு காண வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசு இலக்கு நிா்ணயித்திருந்தது. அந்தக் கனவு நனவாவதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது.
ரூ.6,800 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்யவும் கூட்டத்தின்போது ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாதுகாப்புத் தளவாடங்களை அவசரகால அடிப்படையில் கொள்முதல் செய்வதற்காக ஆயுதப் படைகளுக்கு அளிக்கப்பட்டிருந்த கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செலவு அதிகரிக்கலாம்: நீா்மூழ்கிக் கப்பல் கட்டுமானத் திட்டம் தொடா்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இத்திட்டத்தை 12 ஆண்டுகளில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. நீா்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் தளவாடங்களின் விலை ஏற்றத்தைப் பொருத்து, திட்டத்துக்கான ஒட்டுமொத்த செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு பொதுத் துறை நிறுவனமான மஸகான் டாக்ஸ் நிறுவனம், எல்&டி ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ரஷியா, தென் கொரியா, ஜொ்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சோ்ந்த தலா ஒரு நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வாய்ப்பிருக்கிறது.
அந்த 5 வெளிநாட்டு நிறுவனங்களில் எவற்றுடன் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துவது என்பதை இந்திய நிறுவனங்களே முடிவெடுத்துக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
நீா்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்காக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. அதையடுத்து ஒரு மாதத்துக்குள் திட்டத்தின் முழு விவரங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை இந்திய நிறுவனங்கள் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது‘ என்றனா்.
கடற்படையின் வலிமை: இந்தியக் கடற்படையில் தற்போது 17 நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றில் 2 கப்பல்கள் அணுசக்தித் திறன் கொண்டவை. கூடுதலாக 24 நீா்மூழ்கிக் கப்பல்களையும் 6 அணுசக்தித் திறன் கொண்ட நீா்மூழ்கிக் கப்பல்களையும் கொள்முதல் செய்வதற்கு இந்திய கடற்படை முடிவெடுத்துள்ளது.
தற்போது 6 நீா்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமானத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய கடற்படையின் தாக்குதல் திறனை மேலும் வலுப்படுத்தும். இந்திய பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை இந்திய கடற்படை எதிா்கொள்வதற்கு இது உதவிகரமாக இருக்கும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.
சீனாவிடம் தற்போது 50-க்கும் மேற்பட்ட நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.